இயக்குநர் பாரதிராஜாவின் பெயரில் மோசடி? - மகனின் இழப்பால் வாடும் இமயத்தைச் சுற்றும் பணப்பேய்கள்!
தமிழ் திரையுலகின் 'இயக்குநர் சிகரம்' பாரதிராஜா, உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஈழத் தமிழர்களுக்காகப் பல போராட்டக் களங்களில் முன்னின்றவர் அவர்.
ஆனால், தற்போது 80 வயதைக் கடந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் மிகுந்த சோர்வடைந்து காணப்படுகிறார். குறிப்பாக, கடந்த மார்ச் 25, 2025 அன்று அவரது அன்பு மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானது அவரை மனதளவில் நிலைகுலையச் செய்துள்ளது.
மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் பாரதிராஜா அவர்கள் தனிமையில் வாடுவதைப் பயன்படுத்திக்கொண்டு, அவருக்கு நெருக்கமான சில சமூக விரோதிகள் அவரது செல்போனைப் பயன்படுத்திப் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாரதிராஜாவின் பெயரில் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு "உதவி தேவை" என குறுஞ்செய்திகள் (SMS) அனுப்பப்படுகின்றன.
இதனை உண்மையென நம்பி நடிகர் தனுஷ் உள்ளிட்ட சில பிரபலங்கள் நேரில் சென்று நிதி உதவி செய்துள்ளனர். ஆனால், அந்தப் பணம் அவரை முறையாகச் சென்றடையவில்லை என்றும், அவருக்குப் பணிவிடை செய்பவர்களே அதனைச் சுரண்டுவதாகவும் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
பாரதிராஜாவுக்கு ஒரு மகள் இருந்தாலும், அவர் வெளிநாட்டில் வசித்து வருவதால் இவரைப் பராமரிக்கும் பொறுப்பு தற்போது சில உதவியாளர்களிடம் மட்டுமே உள்ளது. இதைப் பயன்படுத்தி வெளிநாட்டுத் தமிழர்களிடமும் இந்தக் கும்பல் குறிவைத்து வருகிறது. எனவே, பாரதிராஜாவுக்கு உதவ நினைப்பவர்கள்,
முன்பின் தெரியாதவர்களுக்குப் பணத்தை அனுப்ப வேண்டாம் எனத் திரையுலகினர் எச்சரிக்கின்றனர். இத்தனை ஆளுமைகளை உருவாக்கிய ஒரு கலை ஜாம்பவானின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
